தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு (26-03-2023)



 வாசகங்கள்

முதல் வாசகம் : எசேக்கியேல் 37:12-14

இரண்டாம் வாசகம் : உரோமையர் 8:8-11

நற்செய்தி வாசகம் : யோவான் 11:1-45

திருப்பலி முன்னுரை 

       தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் மாட்சியை கண்டுணர வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 

         வாழ்வில் நம்பிக்கையற்று, உள்ளத்தில் உறுதியற்று, ஏன் எனக்கு மட்டும் இவ்வாறு நேர்கிறது என்று வாழ்வை பழிக்கும் மக்களிடையே வாழும் நாமும் பல நேரங்களில் கிறிஸ்துவின் மீது நம்பிக்கையற்றே வாழ்கிறோம். இதைக் களைந்து அவர்மீது நம்பிக்கை கொள்ளும் போது உள்ளத்தில் உறுதியும், வழியில் தெளிவும் தென்படும். 

           "நீ நம்பினால் இறைவனின் மாட்சியை காண்பாய்" என்று இறைவன் நம் அனைவரிடமும் இன்று கூறுகிறார். நம்பிக்கைக்கு பலம் அதிகம் உலகம் உள்ளவரை நம்பிக்கை ஒன்றே அதை புதுப்பிக்கும். அதனால் தான் தான் தேர்ந்து கொண்ட மக்கள் தன்னிடம் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் தன் ஒரே மகனையும் இழக்க துணிந்தார் கடவுள். 

                வாழ்வில் பிடிப்பற்று வாழ்வை சந்தேகத்துடனும் பயத்துடனும் அணுகும் அனைவருக்கும் ஆண்டவரின் அழைப்பு நம்பிக்கை. நம்பினால் மாட்சி உண்டு என்பதை உணர்ந்து, இறைவனோடு இரக்கத்தின் காலத்தில் பயணிக்கும் வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம். 



முதல் வாசகம் முன்னுரை 

     இறைவாக்கினர் எசேக்கியேல் நூலில் எலும்புகளுக்கு இறைவாக்கு உரைப்பதை மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. நம்பிக்கையற்று சிதைந்து போன இஸ்ரேல் மக்களுக்காக இறைவன் இறைவாக்கு உரைக்க பணிக்கின்றார். நம்பிக்கையற்று உள்ளம் நொந்து, உடைந்து போன நமக்கு உயிர்மூச்சு அளிக்கும் வண்ணம் இவ்வாசகம் அமைந்துள்ளது. ஆகவே உள்ளத்தால் இறைவனின் வருகைக்காக எதிர்பார்த்த நாம் அவரின் அழைப்பை ஏற்று உள்ளத்தை நம்பிக்கையால் நிரப்ப வாசகத்தை மனதில் ஏற்போம். 



இரண்டாம் வாசகம் முன்னுரை 

       தூய ஆவி அருளும் வாழ்வை மையமாக வைத்து திருத்தூதர் பவுல் இவ்வாசத்தை அமைத்துள்ளார். தூய ஆவி நம்முள் இருக்கும் போது நமது தீய வாழ்வை நன்மைதனங்களால் நிரப்பும் என்றும், இறைமகனுக்கு உயிர்க் கொடுத்த அந்த தூய ஆவி நம்மையும் உயிர்ப்பிக்கும் என்றும் கூறுகிறார் திருத்தூதர். கிறிஸ்து நமக்குள் இருக்கும் போது நாமும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவது நிதர்சனம் என்று கூறும் இவ்வாசத்தை கேட்கும் நாமும் தூய ஆவி நம்முள் குடிகொள்ள வாசகத்திற்கு உள்ளக்கதவுகளை திறப்போம். 



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. அன்பு எல்லைகள் அற்றது, பேதம் பார்க்காது. வேற்றுமைகள் களைந்து அனைவரையும் அன்பு செய்தார் நம் பரமபிதா. அன்புள்ளம் இருந்தால் பகைமை இருக்காது என்பதை நாங்கள் உணரவும், பகைமையை அன்பால் வெல்லவும், பகைமை சுவர்களை அன்பால் உடைக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. தாழ்ச்சி மிகவும் பலம் வாய்ந்தது. வீரம் செறிந்தவர்களால் மட்டுமே தாழ்ச்சியோடு வாழ முடியும். வீரனுக்கு முன் பணியாமல், வீரனாய் இருந்தும் தாழ்ச்சி குணம் படைத்து வாழவும், இயேசுவே உம்மைப்போல் தாழ்ச்சியை மனதில் ஏற்று வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அனைவரும் தலைவராக முதன்மையாக இருக்க விரும்பும் இவ்வுலகில், தொண்டு செய்து வாழ்வதே தலைமைப்பண்புக்கு அடித்தளம் என்பதை நாங்கள் உணர்ந்து செயல்படவும், தொண்டு செய்து வாழும் உள்ளமே சீடத்துவத்தின் முன்னோடி என்பதை ஏற்று உண்மை சீடத்துவ வாழ்வு வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. மனிதர்களிடையே காலம், உணவு பழக்கவழக்கங்கள், சமூகங்கள், கருத்தியல்கள், சமயங்கள் அடிப்படையில் புறக்கணிப்புகள் இன்றும் தொடர்கின்றன. புறக்கணிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பதும், புறக்கணிப்புக்கான கட்டமைப்புகளை உடைப்பதும் இயேசுவின் நிலைப்பாடு. இயேசுவே நாங்களும் பிறரை புறக்கணியாமல் பண்பட்ட சமூகமாக வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. மனிதருக்கு செய்யும் நன்மையும் தீமையும் கடவுளுக்கே செய்வது என்பதை நாங்கள் உணரவும், மனிதரை வெறுப்பவர்களால் கடவுளை அன்பு செய்ய முடியாது என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டு இரக்கத்தின் காலமாகிய இந்த தவக்காலத்தில் பிறரோடு ஒப்புரவு கொள்ள தயாராய் இருக்கும் நல்லுள்ளம் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

பிரபலமான இடுகைகள்