தவக்காலம் நான்காம் ஞாயிறு (19-03-2023)



 வாசகங்கள்

முதல் வாசகம் : 1 சாமுவேல் 16:1,6-7,10-13

இரண்டாம் வாசகம் : எபேசியர் 5:8-14

நற்செய்தி வாசகம் : யோவான் 9:1-41 


 திருப்பலி முன்னுரை

      தவக்காலம் நான்காம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் அருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.

        நானே உலகின் ஒளி என்கிறார் இறைமகன். பகலின் ஆட்சியில் அதாவது கடவுளின் ஆட்சியில் இறைமகனின் செய்கைகளை நாம் காண முடியும். ஆனால் அவர்மீது நம்பிக்கையற்ற பலர் அவரை பழித்து தண்டனை தீர்ப்புக்கு உள்ளாக்குகின்றனர். இருளின் ஆட்சி வரும் போது இவையாவும் வெளிப்படும். 

      இருளின் ஆட்சியை கைக்கொண்டோர் செய்கைகளை பகலில் பிறருக்கு அறிவிக்க இயலா வண்ணம் இருக்கும். இறைமகன் மீது நம்பிக்கை கொண்டோர் இருளின் செய்கைகளை உதரிவிட்டு இயேசுவின் மதிப்பீடுகளை பறைசாற்றி இறைவனோடு இணைந்து வாழ்வர். 

  இரக்கத்தின் காலமாகிய இத்தவக்காலத்தில் பயணிக்கும் நாமும் ஒளியின் மக்களாக வாழ நம்மை தயாரிப்போம். இயேசுவின் வழியை பின்பற்றி அவரது மதிப்பீடுகளை பிறரிடம் எடுத்துரைத்து கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ நம்மை அர்ப்பணிப்போம். வாழும் கடவுளின் அருள் பெற்று இறைவனோடு இணைய இத்திருப்பலியில் செபிப்போம். 



முதல் வாசகம் முன்னுரை 

  சாமுவேல் முதல் நூலில் இருந்து அமைந்துள்ள முதல் வாசகம் தாவீது திருப்பொழிவு செய்யப்பட்டதை மையமாக வைத்து அமைந்துள்ளது. இறைவன் தான் தேர்ந்து கொள்ள விரும்பியவரை அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் ஏற்றுக் கொள்வார் என்பதே இதன் வெளிப்பாடு. தாயின் வயிற்றில் உருவாக்கிய போதே நம்மை தேர்ந்தெடுத்த இறைவன் அவருக்காக நாம் வாழ, அவரது இறையாட்சி பணியை செய்ய நம்மை அழைக்கிறார். இவ்வழைப்பை ஏற்று இறைவனோடு இணைந்து வாழ வாசகத்திற்கு மனதை திறப்போம். 


 இரண்டாம் வாசகம் முன்னுரை 

   ஒளி பெற்றவர்களாய் நடந்து கொள்ள அழைப்பு விடுக்கும் விதமாக இவ்வாசகம் அமைகிறது. இருளின் செய்கைகளை கைக்கொண்டு வாழும் மக்களுக்கு துணை போகாமல் ஒளியாம் இறைவனை துணையாகக் கொண்டு அவரது மதிப்பீடுகளை நம் வாழ்வில் விதைக்க நம்மை தயாரிப்போம். ஒளியின் மக்களாய் விழிப்போடு வாழ கடவுளின் இரக்கத்தைப் பெற வாசகத்தை வாழ்வாக்குவோம். 



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. மனம் மாறுதல் என்பது எளிதான ஒன்று அல்ல. தன்னிலே தாழ்ச்சி நிறைந்தவர்களால் மட்டுமே தன் தவறுகளை திருத்திக் கொண்டு மனமாற்றம் அடைய முடியும். இத்தகு மனமாற்றம் பெற்றவர்களை ஏற்க இறைவன் காத்திருக்கிறார். மனமாற்றம் வாழ்வின் மாற்றம் என்பதை உணர்ந்து இத்தவக்காலம் வழியாக எமது வாழ்வை மாற்ற அருள்புரிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  2. எதைத் தேடுகிறோமோ அதைக் கண்டடைகிறோம். அறிவை, அருளை, அன்பை, படைப்பாற்றலை, திறமைகளை, சமத்துவத்தை, அறத்திறனை தேடினால் மனித வாழ்வும் சமூக வாழ்வும் வளமாகும் என்பதை நாங்கள் உணர்ந்து சரியானவற்றை தேர்ந்து தெளிந்து வாழ்வில் முன்னேற வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  3. நாம் சினம் கொள்ளும் போது தன்னிலை இழந்து விடுகிறோம். அப்போது நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், நாம் செய்யும் எதிர்வினைகள் நமது மாண்பை குலைத்துவிடுகின்றன. வலு குறைந்த மக்களிடமே நம் சினம் வெளிப்படுகிறது. எமது அன்பால் சினத்தை வெல்லும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  4. கடவுளைப் புறக்கணித்து உலக செயல்களில் நாட்டம் கொண்டு வாழும் மக்களுக்கு இடையே சரியானவைகளை புரிந்து கொண்டு உமது இறையாட்சி பணிக்கு எம்மை அர்ப்பணித்து வாழவும், எமது நல்ல எண்ணங்களால் பிறரை வாழ்விக்கும் மனம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  5. கொடுப்பதற்கு திறந்த மனங்களும் விரிந்த கைகளும் வேண்டும். சுயநல கோட்டைகளுக்குள் தங்களை சிறைப்படுத்திக் கொள்ளும் மனிதர்களால் உலகிற்கு எதையும் கொடுக்க முடியாது. பதுக்கும் மனிதர்களை விட பகிரும் மனிதர்களையே கடவுள் விரும்புகிறார் என்பதை நாங்கள் உணர்ந்து பகிரும் மனம் கொண்டு வாழ உமது அருளைப் பொழிந்து காக்க உம்மை மன்றாடுகின்றோம். 


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

பிரபலமான இடுகைகள்