பாஸ்கா நான்காம் ஞாயிறு (30-04-2023)



 வாசகங்கள்

முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 2:14, 36-41

இரண்டாம் வாசகம் : 1 பேதுரு 2:20-25

நற்செய்தி வாசகம் : யோவான் 10:1-10

திருப்பலி முன்னுரை 

  இணைந்திருப்பதே வாழ்வின் முதிர்ச்சி, இணைந்திருப்பதே வாழ்வில் மகிழ்ச்சி என்றும் இறைவனோடு இணைந்து வாழ இறை ஆசீர் பெற இறையில்லம் நாடி வந்திருப்போருக்கு வாழ்த்துக்கள். 

      இணைந்த வாழ்வு என்பது என்றும் பிரியாத வாழ்வு. பிறரை ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது. இணைந்த பயணத்தின் வழியே இலக்கை அடைவது. தந்தையும் இயேசுவும் ஒன்றாய் இருப்பது போல நாமும் சமூகத்தின் பிற மக்களோடு இணைந்து வாழ வேண்டும். இதையே இறைமகன் இயேசுவும் விரும்புகிறார். 

         இதனாலேயே திருத்தூதர்களை ஏற்படுத்தி அவர்களை பிற இனத்தாருக்கு நற்செய்தி பணியாற்ற பணிக்கிறார். மனம் மாறி நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு இறை பாதம் சரணாக வேண்டும். புதுவாழ்வு வாழ நற்செய்தி துணை புரியும் என்ற உண்மை புலப்படும். தினமும் இறை அன்பில் புது உயர்வு காண உள்ளம் ஏங்கும். 

         உறவின் மூலம் நம்மை உருவாக்கிய இறைவனின் வழி நின்று தூய வாழ்வு வாழ நம்மை தயாரிப்போம். என்றென்றும் இரக்கத்துடன் புதுவாழ்வு பெற்று இணைந்து பயணிக்கும் வரம் கேட்டு திருப்பலியில் இணைந்து செபிப்போம்.



முதல் வாசகம் முன்னுரை

   திருத்தூதர் பணிகள் நூலில் இருந்து முதல் வாசகம் அமைந்துள்ளது. திருத்தூதர் பேதுருவின் அருளுரையை மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. திருமுழுக்கின் மேன்மையை திருத்தூதர் பேதுரு அழகுற எடுத்துக் காட்டுகிறார். மனம் மாறி திருமுழுக்கு பெறும் போது தூய ஆவியை கொடையாக பெறுகிறோம். இதனால் புதுப்பிறப்பாகி இறைவனில் நிலைத்து நிற்போம் என்றுரைக்கும் வாசகத்தை கேட்கும் நாமும் இறைவனில் மனம் மாற வாசகத்தை வாழ்வாக்குவோம். 



 இரண்டாம் வாசகம் முன்னுரை 

         திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்தில் இருந்து இரண்டாம் வாசகம் அமைந்துள்ளது. துன்புறும் கிறிஸ்துவின் முன்மாதிரியை மையமாக வைத்து இந்த வாசகம் அமைகிறது. புனிதமிக்க இறைவன் நம்முடைய பாவங்களுக்காக இறந்து நீதிக்காக வாழ்கிறார். நாம் அவருடன் ஒன்றாக இணைக்கப்பட்டு வாழ்வதால் பேறுபெறுகிறோம். நமக்காக மறித்த இறைவனின் பாதையை நமதாக்கி வாழ வாசகத்திற்கு மனதை திறப்போம். 



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. நல்லவற்றை ஏற்கும் மனம் தந்த இறைவா! சுறுசுறுப்பான உள்ளம் துணிச்சலின் பிறப்பிடம். மந்த உள்ளம் சோம்பேறி தனத்தின் பிறப்பிடம் என்பதை நாங்கள் உணர்ந்து எம்மிடம் காணப்படும் மந்தமான உணர்வுகளை களைந்து, நல்லவற்றை நம்பவும், நாங்கள் நம்புகிறவற்றை எம் வாழ்வில் நடைமுறைப்படுத்தவும் உமதருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  2. புதிய உலகம் படைக்க எம்மை அழைத்த இறைவா! உண்மைகளை ஏற்றுக்கொள்ள அகப்பார்வை மிக அவசியமானது. நமது னக்கண்கள் திறக்கும் போது வாழ்வே மாறிவிடுகிறது. இறைவா புதிய உலகம் படைக்க அகக்கண்கள் எங்களுக்கு அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டு சரியானவைகளை கண்டுணர அகமனம் தந்து வழிநடத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  3. வன்சொல் தவிர்த்து இனிமையாக வாழ எம்மை அழைத்த இறைவா! நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் அன்பு வெளிப்பட வேண்டும். வன்சொல் நிறைந்த உலகில் வாழும் நாம் இறைமகனை உதாரணமாகக் கொண்டு நமது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் இனிமையாக மாற்ற வன்சொல் தவிர்த்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  4. வாழ்வில் நம்பிக்கையோடு வாழ எம்மை அழைத்த இறைவா! நம்பிக்கையின்மையை நாங்கள் எங்கள் வாழ்வின் பல்வேறு நிலைகளில் காண்கிறோம். கடவுள், மனிதர்கள், இயக்கங்கள் ஆகிய பல நிலைகளில் நம்பிக்கையின்மை காரணமாக வாழ்வை கலங்க வைக்கிறோம். இத்தகைய உணர்வை எமது வாழ்வில் இருந்து அகற்றி இதுவும் கடந்து போகும் என்ற நேர்மறை சிந்தனையை எமது வாழ்வில் கடைபிடித்து வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்க எமக்கு கற்றுத்தந்த இறைவா! எண்ணங்களும் செயல்களும் புதிதாகிக் கொண்டே இருந்தால் வாழ்க்கை அழகாகும். இறையாட்சியின் விழுமியங்களை ஏற்று, புதிதாய் சிந்தித்து, உள்ளத்தில் புதிதாய் பிறந்து, புதியன படைக்க வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்