பாஸ்கா மூன்றாம் ஞாயிறு (23-04-2023)



 வாசகங்கள்

முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 2:14, 22-33

இரண்டாம் வாசகம் : 1 பேதுரு 1:17-21

நற்செய்தி வாசகம் : லூக்கா 24:13-35

திருப்பலி முன்னுரை 

      பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் நம்பிக்கையில் நிலைபெற வந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 

        பணிக்குருத்துவத்தின் மையம் தன்னை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களுக்கு தன்னையே அர்ப்பணிப்பது ஆகும். இந்த குருத்துவ பணிக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் நம் இறைமகன் இயேசு. நம் பாவங்களுக்காக தூய செம்மறியான இயேசுவின் இரத்தம் கழுவாயானது. 
             
            அவரது இறப்பு நம் அனைவருக்கும் ஆனது. இறந்த அவரை கடவுளின் மாட்சி நிலைபெற உயிர்த்தெழ செய்தார் கடவுள். இதன் வழியாக நாம் அவர் மீது நம்பிக்கை கொண்டு அவரோடு இணைந்து வாழ அழைப்பு விடுத்துள்ளார் இறைவன். 

      திருச்சட்டம் வழியாக அவரது உயிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உலகை மறுதலியா மாவீரனின் உயிர்ப்பு நமக்கு புதுவாழ்வு நல்குகிறது என்பதை உணர்வோம். இறைநம்பிக்கையில் மாறாதவர்களாய் என்றும் இறைவழியில் பயணித்து கடவுளின் மாட்சியை நமதாக்க வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம். 


முதல் வாசகம் முன்னுரை 

      திருத்தூதர் பேதுருவின் அருளுரைகளை மையமாக வைத்து திருத்தூதர் பணிகள் நூலில் இருந்து இவ்வாசகம் அமைகிறது. திருச்சட்டத்தை உணராத மக்கள் கிறிஸ்து இயேசுவை எவ்வாறு சிலுவையில் அறைந்தனர் என்றும் கடவுள் அவரை எவ்வாறு உயிர்த்தெழ செய்தார் என்றும் இவ்வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. வாக்களிக்கப்பட்ட தூய ஆவியை நமக்கு அருள்பவர் நம் இயேசு கிறிஸ்துவே. அவரது உயிர்ப்பு நமது உயிர்ப்பின் முன் அனுபவம். ஆகவே தூய ஆவியை கடவுளிடம் இருந்து பெற்றுக்கொண்டு நம்மையே புதுப்பிக்க வாசகத்தை வாழ்வாக்குவோம். 


 இரண்டாம் வாசகம் முன்னுரை 

      திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்தில் இருந்து தூய வாழ்வுக்கான அழைப்பு என்பதை பின்னணியாகக் கொண்டு இவ்வாசகம் அமைகிறது. நம் தந்தையாகிய கடவுள் நம் முகத்தை பார்த்து அன்று மாறாக நம் செயல்களின் நிமித்தமே தீர்ப்பு வழங்குவார். அழியக் கூடிய நம் வாழ்வுக்கு அழியா வித்தாகிய கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தை விலைமதிப்பாக்கினார் தந்தைக் கடவுள். அவர் மீது நம்பிக்கை கொண்டு அவரை எதிர்நோக்கி காத்திருக்கும் நமக்கு புதுவாழ்வு கிடைக்க வாசகத்திற்கு மனதை திறப்போம். 


நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  • உலகம் வாழ தன்னையே உடைத்த இறைவா! உடைபட்ட தம்மை கையளிப்பவர்களால் இவ்வுலகம் உயர்வடைகிறது. உடலையும் உதிரத்தையும் நமக்காக கொடுத்த இயேசு தன் மேன்மை நிலையையும் உடைக்கிறார். தொண்டு செய்வதும், இறங்கி வருவதும் தன்னை உடைப்பதற்கான அடையாளங்கள் என்பதை நாங்கள் உணர்ந்து உலகும் எம் உறவுகளும் உயர எம்மையே உடைக்கும் நல்மனம் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  • உமது உயிர்ப்புக்கு சாட்சிய வாழ்வு வாழ எம்மை அழைத்த இறைவா! உயிர்ப்பு அனுபவம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நம்மில் நிகழ தம்மையே கையளித்தார் இறைமகன். நமது சொல்லும், செயலும், எண்ணங்களும், பிற மனிதர்களுக்கும் இயற்கைக்கும் சமூகத்திற்கும் நற்பயன் தந்தால் இயேசுவின் உயிர்ப்புக்கு நாமும் சாட்சிய வாழ்வு வாழ்கிறோம். எமது வாழ்வின் வழியாக உமது உயிர்ப்புக்கு சாட்சிய வாழ்வு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  • நம்பிக்கையின் மாட்சியை எம்மில் விதைத்த இறைவா! நமது சொல்லிலும் செயலிலும் நம்பிக்கை வெளிப்படும் போது நம்மை காண்போரும் இறை மாட்சியை உணர முடியும். எமது வாழ்வின் வழியாக இறை மாண்பை நம்பிக்கையோடு பிறருக்கு எடுத்துரைக்கும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  • வதந்திகளை புறக்கணித்து வாழ்ந்த இறைவா! சமூகத்தின் மீதும், நன்மைதனங்கள் மீதும் மாற்று கருத்து உடையவர்களை உலகம் வதந்திகள் மூலம் மூழ்கடிக்க எண்ணுகிறது. பொய்களை பரப்புரை செய்தால் உலகம் நம்பும் என்ற மனநிலை எம்மிலிருந்து அகன்று, இணைந்து பயணிக்கும் சமூகமாக நாங்கள் இணைந்து வாழவும், பொய்யான வதந்திகளை வெறுத்து அனைவரும் வாழ்வு பெற உழைக்கும் நல்மனம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  • உறவுகளின் ஆழத்தை எமக்கு உணர்த்திய இறைவா! உறவின் நெருக்கம் அதிகமாக அதிகமாக அன்பிற்குரியவர்கள் நம் வாழ்வோடு நெருக்கமாகிறார்கள். எம்முடைய குடும்பங்களில் நெருக்கமான உறவுகள் சிக்கலை குறைக்கும், மகிழ்வை வளர்க்கும் என்பதை நாங்கள் உணர்ந்து உறவுகளை மதித்து, அதன் ஆழத்தை புரிந்து எமது உறவுபாலத்தை வலுப்படுத்த உமதருள் பொழிந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

பிரபலமான இடுகைகள்