பாஸ்கா இரண்டாம் ஞாயிறு (16-04-2023)


 வாசகங்கள்

முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 2:42-47

இரண்டாம் வாசகம் : 1 பேதுரு 1:3-9

நற்செய்தி வாசகம் : யோவான் 20:19-31



திருப்பலி முன்னுரை 

   பாஸ்கா இரண்டாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று உயிர்த்த ஆண்டவரின் அருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 

        உயிர்த்த ஆண்டவர் திருத்தூதர்களுக்கு தம் அருளைப் பொழிய அவர்கள் முன் வந்து நின்றார். சீடர்கள் அவரைக் கண்டு வணங்கினர். இறை இரக்கத்தின் ஞாயிறாகிய இன்று உயிர்த்த ஆண்டவர் நம்மைத் தேடி அவரது இரக்கத்தை நம்மிடம் பகிர வந்திருக்கிறார். 

       இன்று பலர் இயேசுவைக் கண்டும் காணாமல் வாழ்கின்றனர். அண்டை வீட்டாரில், இன்னலில் தவிக்கும் மக்களில், வாழ்வை இழந்து தவிக்கும் மனிதரில் என்று பலதரப்பட்ட மக்களில் நாம் இறைவனை காண்பது இல்லை. அவரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதும் இல்லை. 

    இன்றைய சூழலில் நம்முடைய வாழ்வினை எண்ணிப் பார்ப்போம். தோமாவைப் போல இறைவனைக் கண்டால் தான் நம்புவேன் என்று நினைக்கிறோமா அல்லது காணாமலே அவரிடத்தில் நம்பிக்கை வைக்கின்றோமா என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். நம் கண் முன்னே தவிக்கும் மக்களின் வாழ்வுக்காக உரிமைக் குரல் கொடுப்போம். 

         நம்பிக்கையால் புடமிடப்படும் மனிதர்கள் நிச்சயமாக தங்கள் வாழ்வில் ஆன்ம மீட்பைக் கண்டடைவார்கள் என்பது நிதர்சனம். இறைவனைக் காணாமலேயே நம்பும் மக்களாக வாழ்ந்து இறை இரக்கத்தை நாம் பெற்று, பிறரும் பெற வழிவகை செய்ய நம்மை இழக்க முன்வருவோம். 

       இறை இரக்கம் பெற்று பிறர் வாழ, இறை வழியில் நம் வாழ்வை அர்ப்பணித்து வாழ்வோம். இயேசுவே ஆண்டவர் என்பதை நம் வாழ்வின் வழியாக பிறருக்கு எடுத்துரைக்கும் வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம். 


முதல் வாசகம் முன்னுரை 

      திருத்தூதர் பணிகள் நூலின் நம்பிக்கைக் கொண்டோரின் வாழ்க்கை முறையை பின்னணியாகக் கொண்டு இவ்வாசகம் அமைகிறது. தொடக்க கால கிறிஸ்தவர்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்றும் அவர்களின் அன்புறவும் இவ்வாசகம் வழியாக விளக்கப்படுகிறது. கிறிஸ்து இயேசுவின் மீது நம்பிக்கைக் கொண்டு அவருக்காக அனைத்தையும் இழந்து பிறர் வாழ்வு பெற விரும்பும் மனதுடையோர் நிலைவாழ்வைப் பெறுவர் என்பது கண்கூடாக இவ்வாசகம் வழியாக தெரிகிறது. நாமும் தொடக்க கால கிறிஸ்தவர்களைப் பின்பற்றி இறைவனில் நிலைவாழ்வு பெற வாசகத்தை வாழ்வாக்குவோம். 


 இரண்டாம் வாசகம் முன்னுரை 

      திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்தில் உயிரூட்டும் எதிர்நோக்கு என்பதை மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. பொன் எவ்வளவு புடமிடப்படுகிறதோ அவ்வளவு பொலிவு பெறும். அதுபோலவே சோதனைகளால் புடமிடப்படும் மனிதர் நம்பிக்கையால் மீட்பைப் பெறுவர் என்ற உயரிய உண்மையை இவ்வாசகம் உலகோர்க்கு எடுத்துரைக்கிறது. சோதனைக் கடலில் தத்தளிக்கும் நம் வாழ்வு மீட்பை நோக்கி பயணிக்க நம்பிக்கை என்ற படகு அவசியம். ஆகவே இவ்வாசகத்தை கேட்கும் நாமும் விலைமதிப்பற்ற நம் நம்பிக்கையால் ஆன்ம மீட்பு அடைய வாசகத்திற்கு மனதை திறப்போம். 


நம்பிக்கையாளரின் மன்றாட்டு 

  1. பாவங்களுக்கு அடிமையாகாமல் எம்மை வாழ பணித்த இறைவா! பாவத்திற்கு அடிமையாக இருப்போர் சிறுமையுற்று, மழுங்கிப் போன மனச்சான்றை தமதாக்கிக் கொள்கின்றனர். மாறாக கடவுளுக்கும், நன்மைதனங்கள் நிறைந்தவற்றிற்கும் அடிமையாக இருப்போர் மேன்மையுறுகின்றனர். எமது வாழ்வில் நாங்கள் பாவங்களை அகற்றி தீவினைக்கு அடிமைப்படாமல் வாழ விழிப்பு மனம் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  2. மரணத்தை வெல்லும் சக்தி கொண்ட இறைவார்த்தையை எமக்களித்த இறைவா! வாழ்வில் அழிவு என்ற முடிவு இருப்பினும் இறைவார்த்தையை கடைபிடித்து வாழ்வோருக்கு அழிவு என்பது இல்லை. இறைவார்த்தையின் பொருட்டு நாங்கள் துன்பங்களை, நிராகரிப்புகளை, புறக்கணிப்புகளை சந்தித்தாலும் எங்கள் வாழ்வில் அழிவு என்பதில்லை என்பதை நாங்கள் ஏற்கவும், உமது வார்த்தை வழி வாழ்ந்து சாவை வெல்லும் ஆசி தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  3. சதிச்செயல் கோழைகளின் ஆயுதம் என்றுரைத்த இறைவா! அரசியல், சமயம், சமூகம், ஊடகம் என்ற அனைத்து துறைகளிலும் மாற்று சிந்தனை உடையவர்களை ஒழிக்கும் ஒரே வழி சதிச்செயல். இயேசுவை காட்டிக்கொடுத்தோரும் அதையே செய்தனர். கருத்துக்களை, சிந்தனைகளை எதிர்கொள்ள முடியாதவர்களே சதிச்செயல் செய்கின்றனர். ஆகவே எமது வாழ்வில் அனைத்து சோதனைகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் எம்மிடம் பிறக்கவும், கோழைகளின் செயல்களை விடுத்து மனவுறுதியுடன் வாழ உமதருள் பொழிந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  4. பணப்பற்றை விடுத்து வாழ எம்மை அழைத்த இறைவா! உறவுகளுக்கு செய்யப்படும் உதவிகள் கூட பணக்கணக்கு பார்க்கும் உலகில் நாங்கள் எமது வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பணப்பற்று பிறரை வஞ்சிக்கும் என்பதை நாங்கள் உணர்ந்து அதைக் களைந்து பிறருக்கு இரங்கும் நல்மனம் எம்மில் வளரவும், உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து நாங்கள் வாழவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. நமது அன்பு செயல்களே நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கும் என்றுரைத்த இறைவா! சிலரின் பிறப்பு உலக மனிதர்களால் கொண்டாடப்படுகிறது மாறாக சிலரின் பிறப்பு அதற்கு எதிர்மறையாகிறது. நமது அன்றாட வாழ்வும் நமது அன்பு செயல்களுமே நமத பிறப்புக்கு அர்த்தம் கொடுக்கின்றன. எமது பிறப்பின் நோக்கத்தை நாங்கள் உணர்ந்து கொள்ள ஞானமும், எமது பிறப்பை அர்த்தமுள்ளதாக்கும் சுய சிந்தனைகளையும் தந்த எம் வாழ்வை வளப்படுத்த வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

பிரபலமான இடுகைகள்