திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு (02-04-2023)



 வாசகங்கள்

முதல் வாசகம் : எசாயா 50:4-7

இரண்டாம் வாசகம் : பிலிப்பியர் 2:6-11

நற்செய்தி வாசகம் : மத்தேயு 26:14 - 27:66


பவனி முன்னுரை 

    புனிதரான இயேசு மனிதராக இம்மண்ணில் பிறந்ததற்கும் மனிதர்கள் ஆகிய நாம் புனிதர்களாக வாழ்வதற்கும் கொடுக்கப்பட்டதே புனித வாரம். அன்று இறைமகன் மேற்கொண்ட ஒலிவ பயணத்தை நினைவுகூறும் வகையில் நாம் இன்று ஒன்று சேர்ந்துள்ளோம். 

         மரத்தில் புதிய குருத்து வளர்ந்து புதுவாழ்வு பெற்று தன்னில் மாற்றத்தை காண்பதைப் போல இதை ஏந்தி இப்பயணத்தில் பங்குகொள்ளும் நம் அனைவரின் உள்ளங்களிலும் புது மாற்றத்தை காண உறுதி கொள்வோம். நம் பழைய வாழ்வை மறந்து புதுவாழ்வு பெறும் நம்பிக்கையோடு இப்பயணத்தை மேற்கொள்ள நம்மை தயாரிப்போம். 



 திருப்பலி முன்னுரை

   திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று இறைவனின் கல்வாரி பயணத்தை நினைவுகூற வந்திருப்போருக்கு தவக்காலம் ஆகிய இரக்கத்தின் காலத்தின் பலனை பெற வாழ்த்துக்கள். 

  அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார். உலகின் பல திசைகளில் வாழும் மக்களை அன்றாடம் பலரை முன்சார்பு எண்ணங்களால் தீர்ப்பிடுகின்றனர். தீர்ப்பிடுபவர்கள் தங்கள் குற்றங்களைக் காண மறுக்கின்றனர். ஆனால், நம் ஆண்டவர் இயேசு நமக்காக தீர்ப்புக்கு உள்ளானார். 

          நம் பாவங்களுக்காக உயிர் தியாகம் செய்த நம் ஆண்டவரை இன்று நாம் நினைவு கூறுகையில், நாம் பிறரை தீர்ப்பிட்ட தருணங்களை எண்ணி அதை திருத்த முயல்வோம். இறைபாடுகள் வழி நம் வாழ்வை இறைவனில் அர்ப்பணித்து தெய்வீக வாழ்வில் இணைவோம். 

      என்றும் வாழும் இறைவன் நம்மை பாதுகாத்து என்றென்றும் உடனிருந்து வழிநடத்த இறைவுதவி நாடுவோம். பிறரை தீர்ப்பிடாமல் என்றும் இறைவழியில் வாழ இத்திருப்பாடுகளின் பலியில் இணைந்து செபிப்போம். 



முதல் வாசகம் முன்னுரை 

       இறைவாக்கினர் எசாயா, ஆண்டவரின் ஊழியரின் அர்ப்பணிப்பு எங்ஙனம் அமைய வேண்டும் என்பதை எடுத்துக் கூறுவதை மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. நலிந்தவர்களை நம்பிக்கையால் ஊக்குவிக்கவும், நிந்தனை செய்வோருக்கு எதிராக கிளர்ச்சி செய்யாமல் அதை தாங்கி கொள்ளவும் ஆண்டவர் வலிமை அளித்துள்ளார். ஏனெனில் ஆண்டவரின் துணை நமக்கு உண்டு. அவர் நம்மை இகழ்ச்சிக்கு உள்ளாக்க மாட்டார். துணிந்து நம் காரியத்தை மேற்கொள்ள இறைவனின் உறுதி நம்மில் பிறக்க வாசகத்திற்கு மனதை திறப்போம். 



இரண்டாம் வாசகம் முன்னுரை 

    கடவுள் வடிவில் இருக்க வேண்டிய இறைவன் நமக்காக அனைத்தையும் துறந்து அடிமையின் வாழ்வை ஏற்றார். தம்மை தாழ்த்தி, தந்தையின் சொற்படி, தம்மை வெறுமையாக்கி, சிலுவை மரணம் ஏற்றார் என்கிறார் திருத்தூதர் பவுல். தம் தந்தைக்கு கீழ்படிந்து வாழ்ந்ததால் அவர் அனைவருக்கும் மேலாகத் திகழ்கிறார். இயைசுவே ஆண்டவர் என வாயார அறிக்கையிட நம் உள்ளங்களை இறைவார்த்தைப் பக்கம் திருப்புவோம். 



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. வாழ்வின் அடையாளமாக தண்ணீர் இருக்கிறது. இந்த தண்ணீரை மையமாக வைத்தே மனித வாழ்வு அமைகிறது. தண்ணீரை மாசுபடுத்துவது மொத்த மனித இனத்திற்கே புரியும் அவமதிப்பு என்பதை நாங்கள் உணர்ந்து, வாழ்வின் ஊற்றாம் தண்ணீரை பாதுகாக்கவும், மாசின்றி பேணவும் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  2. இறைவாக்குகளையும், நல்ல போதனைகளையும் சொல்லும் காலத்தில் யாரும் மதிப்பதில்லை என்றாலும் நல்லவற்றை உரக்க சொல்வதே சாலச்சிறந்தது. எதிர்க்கப்படுவதையும் புறக்கணிக்கப்படுவதையும் பொருட்படுத்தாமல் என்றும் சரியானவற்றை மட்டுமே பேசவும் உண்மைக்கு குரல் கொடுக்கும் ஊக்கத்தை எமக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. எண்ணிக்கை பாராமல் மன்னிப்பதே இறைவனின் இயல்பு. நாம் வாழும் நாளெல்லாம் பிறரை மன்னித்து கொண்டே இருக்க வேண்டும். மன்னிக்க தேவையானது அன்பில் தோய்ந்த மனம் மட்டுமே. அன்பானவர்களால் மட்டுமே தொடர்ந்து பிறருக்கு மன்னிப்பை வழங்க இயலும். எல்லையின்றி பிறரை மன்னிக்க வரம் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. பிளவு ஏற்படுத்துவது எளிது ஆனால் ஒன்றாக இணைப்பது கடினம். நல்ல நோக்கங்களுக்காக அனைவரையும் ஒன்று சேர்ப்பது மிகச் சவாலனது என்றாலும் இறைத்திருவுளம் நிறைவேற அனைவரும் இணைந்து பணியாற்றுவது மிகச்சிறப்பானது ஆகையால் உமது அருளால் நாங்கள் இணைந்து பணியாற்ற வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. நாம் இறைவனுக்கு செய்யும் அர்ப்பணம் அன்பின் வெளிப்பாடு ஆகும். சக மனிதர் மீது கொள்ளும் அன்பே கடவுளுக்கு ஏற்புடைய அர்ப்பணத்திற்கான அளவுகோல். எமது அர்ப்பணமும் அன்பில் இணைந்ததாக அமைய உமதருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

பிரபலமான இடுகைகள்