தவக்காலம் மூன்றாம் ஞாயிறு (12-03-2023)



 வாசகங்கள்

முதல் வாசகம் : விடுதலைப்பயணம் 17:3-7

இரண்டாம் வாசகம் : உரோமையர் 5:1-2,5-8

நற்செய்தி வாசகம் : யோவான் 4:5-42



திருப்பலி முன்னுரை 

     தவக்காலம் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் அருள் பெற்று செல்ல நம்பிக்கையோடு வந்திருக்கும் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 

            நம்பிக்கையே உலகின் மாபெரும் பிணைப்பு. இப்பிணைப்பில் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நம்பிக்கையோடு இறைவனைத் தேடும் அனைவரும் அவரைக் கண்டு கொண்டு அவருக்கு உகந்த வாழ்வை வாழ்கின்றனர். 

       நல்லோருக்காக ஒருவர் இறப்பது அதிசயமில்லை. ஆனால் பாவிகளாகிய நமக்காக இறைமகன் இறப்பது சரித்திர பக்கங்களை புரட்டிப் போட்ட ஒன்றே. இறைவன் மீது நம்பிக்கை வைத்து உலக பாதையினின்று விலகி வாழ்வோருக்கு அது தெளிவாகும். 

        நமக்காக மரித்த இறைவனின் இரக்கத்தை பெற இத்தவக்காலத்தை பயன்படுத்துவோம். என்றும் வாழும் இறைவனின் அருள் பெற்று வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம். 



முதல் வாசகம் முன்னுரை 

   கடவுள் இஸ்ரேல் மக்களுக்கு மோசே வழியாக தண்ணீர் வழங்கியதை மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. இறைவன் தான் தேர்ந்து கொண்ட மக்களை அவர்களுக்கு வளம் கொழிக்கும் நாட்டிற்கு அழைத்து செல்லும் போது இறைவன் இருக்கிறாரா இல்லையா என்பதை ஆய்ந்தறிய முனுமுனுத்தனர். இதனால் பாறையை அடித்து தண்ணீர் வழங்கி தன்னை வெளிப்படுத்துகிறார் இறைவன். நம் வாழ்விலும் ஆண்டவருக்கு எதிராக செய்த முனுமுனுப்பை விட்டு விலகி அவர் வழியில் பயணிக்க வாசகத்தை வாழ்வாக்குவோம். 



இரண்டாம் வாசகம் முன்னுரை 

   கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதால் ஏற்படும் பயனைக் குறித்து திருத்தூதர் பவுல் இவ்வாசகம் வழியாக விளக்குகிறார். பாவிகளாகிய நமக்காக இறைமகன் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் வகையில் கடவுள் நம்மை அன்பு செய்கிறார். ஆனால் நாமோ அவர் மீது நம்பிக்கை இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று நாம் நினைத்தது நடக்காவிடினும் இதைவிட மேலான ஒன்று இறைவனின் இரக்கத்தால் நம்மை வந்தடையும். இதுவே மேலான நம்பிக்கை. இதை மனதில் ஏற்றோராய் இறைவனுக்கு உகந்த வாழ்வு வாழ வாசகத்திற்கு இதய கதவுகளை திறப்போம். 



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. அனைத்திற்கும் முதன்மையாம் இறைவா! வாழ்வை பெற அனைத்தையும் இழப்பதும், எமது உண்மையான வாழ்விற்கு அடிப்படையான நல்ல பண்புகளை அமைப்பதும் இன்றியமையாதது என்பதை நாங்கள் உணர்ந்து, வாழ்விற்காகவே பொருள்; மாறாக செல்வத்திற்காக வாழ்வன்று என்பதை ஏற்றுக்கொண்டு வாழும் தெளிவு தர வேண்டுமென்று  உம்மை மன்றாடுகின்றோம். 
  2. கடமைக்காகவும் பெருமைக்காகவும் நோன்பிருப்பதும் வழிபாட்டில் கலந்து கொள்வதும் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், நோன்புகள் நன்மை பயப்பனவாகவும் பார்வைகளை பாதைகளை மாற்றுவதாகவும் அமையவும், மனித மனங்களை நெறிப்படுத்தாத நோன்புகளால் எப்பயனும் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்து பிறர் குறையை பார்க்கும் தீமையை களைந்து வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  3. கடவுளின் அருளைப்பெற தகுதியற்றவர்கள் என்று நாங்கள் பிறரை ஒதுக்காமல், அனைவரையும் அன்பு செய்து ஏற்றுக்கொண்டு வாழவும், கடவுள் முன்னிலையில் பேதங்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  4. இறைவனை விட மேலானது இவ்வுலகில் எதுவுமில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டு வாழவும், செல்வம், உறவுகள், உடைமைகள், அழகு, இன்பம், பெருமை, போதை என்று எதை இறைவனுக்கு மேலாக எண்ணினாலும் அவை பயன்தரப் போவது இல்லை என்பதை நாங்கள் உணர்ந்து உம்மையே என்றும் மேலாக கருதி வாழும் மனம்தர  உம்மை மன்றாடுகின்றோம். 
  5. வறியோரின் நண்பராக உடன் நடப்பவர், ஏழைகளுக்கும் எளியவருக்கும் செய்கின்ற எதுவுமே இறைவனுக்கு செய்வதுதான். எளியோர் உயர்வுக்கான நமது செயல்களில் இறைவன் மகிழ்கிறார் என்பதை உணர்ந்து எளியோர் சேவையில் இறைவனை மகிழ்விக்க எம்மை அர்ப்பணிக்க இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

பிரபலமான இடுகைகள்