ஆண்டின் பொதுக்காலம் 7ஆம் ஞாயிறு (19-02-2023)
வாசகங்கள்
முதல் வாசகம் : லேவியர் 19:1-2,17-18
இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 3:16-23
நற்செய்தி வாசகம் : மத்தேயு 5:38-48
திருப்பலி முன்னுரை
ஆண்டின் பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் அன்பில் இரண்டற கலந்து அவரது மகிழ்வைப் பிறரோடு பகிர்ந்து வாழ வந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.
அன்பு இழந்த அனைத்தையும் மீட்டுத் தரும் உயரிய பண்பு. அன்பு இல்லையேல் இவ்வுலகில் எதுவுமில்லை என்ற அளவிற்கு அன்பு எங்கும் நிறைந்து இருக்கிறது. நம்மை படைத்த இறைவன் நம்மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறார். இதனாலேயே தன் ஒரே மகனையும் நமக்காக கையளிக்க துணிந்தார்.
தன் ஒரு கன்னத்தில் அறைபவர்களுக்கு மறுகன்னத்தை காண்பிப்பதும், தனக்கு இருக்கும் அனைத்தையும் ஏழைகளுக்கு கொடுத்துவிடுவதும் கூட அன்பின் வெளிப்பாடுகளே. அன்பு தவறை மன்னிக்கும், அன்பு பிறரிடம் குறைகளை கண்டுகொள்ளாது, பிறர் குறைகளை நிறைகளாக்கும் மாபெரும் சக்தி அன்பிற்கு உண்டு.
அன்பும், தூய்மையும் ஒருவரிடம் இருக்கும் போது அவர் இயேசுவின் சாயலாகிறார். அப்போது கடவுளுக்கும் உரியவராக மாற்றம் காண்கிறார். நாமும் நம்முள் இருக்கும் அன்பை வெளிக்கொணர்வோம். அன்பால் அனைத்தும் சாத்தியமாகும் என்பதை உணர்வோம்.
அன்பின் விதையை தூய்மையான மனதுடன் நமது அனைத்து அயலாரிடமும் விதைப்போம். அதன் பயன் நிச்சயம் ஒரு நாள் வெளிப்படும் என்பதை உள்ளத்தில் ஏற்றோராய், கடவுளுக்கு உரியவர்களாக நம் வாழ்வு மாற்றம் காண திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
லேவியர் நூலில் இருந்து முதல் வாசகம் அமைந்துள்ளது. தூய்மை, நீதி ஆகியவை பற்றிய சட்டங்களை பின்னணியாகக் கொண்டு இவ்வாசகம் அமைகிறது. ஆண்டவர் தூய்மையுள்ளவராய் இருப்பது போல நாமும் தூய்மையுடன் வாழவும், சகோதர சகோதரிகளிடம் அன்பு கொண்டு வாழவும் வேண்டும் என்று கூறுகிறது இவ்வாசகம். தன்னை அன்பு செய்யும் ஒருவரால் பிறரையும் அன்பு செய்து வாழ முடியும் என்பதே இந்த வாசகத்தின் உள்ளடக்கம். பிறரை அன்பு செய்யவும், பிறர் மீது கனிவு கொண்டு வாழவும் வாசகத்திற்கு மனதை திறப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
திருத்தூதர் பவுல் கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இருந்து இவ்வாசகம் அமைகிறது. நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள், இயேசு கடவுளுக்கு உரியவர் என்ற மேலான மறைபொருளை மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. நாம் இறைவன் வாழும் இல்லம் என்றும் நம்மை குறித்து பெருமை பாராட்டலாகாது என்றும் கூறுகிறார் திருத்தூதர். கிறிஸ்துவுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து அவருக்கு சொந்தமாக வாசகத்தை கவனமுடன் வாசிக்க கேட்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- உள்ளத்தால் இறைவனோடு இரண்டற இணைந்து வாழ அழைக்கும் இறைவா! பகட்டும், ஆடம்பரமும், அலங்காரமும் இன்றி உள்ளத்தோடு இறைவனோடு ஒன்றி வழிபாடு செய்யவும்; உள்ளம் இறைவன்பால் ஒன்றிணைவதே சிறந்த இறையனுபவம் என்பதை உணர்ந்து எமது உள்ளத்தை நாங்கள் தயாரித்து, உள்ளத்தால் உம்மோடு இணைந்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- நம்பிக்கையின் நற்செய்தியாக வாழ எம்மை அழைத்த இறைவா! தீமைகள் அழிந்து நன்மையும் உண்மையும் இறுதியில் வெல்லும் என்ற நற்செய்தியின்படி நாங்கள் வாழவும்; நேர்மறை எண்ணங்களை நாங்கள் வளர்த்து நம்பிக்கையின் நற்செய்தியை உலகில் விதைத்து நற்பயன் விளைவிக்க வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- உள்ளத்தூய்மை கொண்டு வாழ வேண்டுவோம்! யாரும் யாரையும் கெடுத்துவிட முடியாது, வெளியில் இருந்து எதுவும் நம்மை தீட்டுப்படுத்த முடியாது. ஆகவே உள்ளம் தூய்மையானால் எண்ணங்கள் தூய்மையாகி அதன்வழி வாழ்வு தூய்மையாகும் என்பதை நாங்கள் உணர்ந்து வாழவும், உள்ளத்தூய்மை பேணி வாழவும் அருள்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- ஆதரவற்றோரின் நம்பிக்கையாக வாழ்ந்த இறைவா! காரியம் நிறைவேற யார் காலிலும் விழ தயாராக இருக்கும் இவ்வுலகில் ஆதரவற்றோரின் நம்பிக்கையாக நீர் வாழ்ந்தீர். உமது வழியை நாங்களும் பின்பற்றி ஆதரவற்றோரின் நலம் காண அவர்களின் விடியலாகவும், நம்பிக்கையாகவும் நாங்கள் மாற அருள்புரிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- பரிவுள்ளம் கொண்டு வாழ எம்மை பணித்த இறைவா! பரிவும் இரக்கமும் நம்பிக்கையாளரின் முகவரி; இவையே இன்றைய உலகிற்கு தேவையான பண்புகள். நாங்கள் எங்களிடையே தேவையில் வாழும் மக்களை கண்ணோக்கி அவர்களிடம் பரிவுள்ளம் கொண்டு வாழ உமது அருளைப் பொழிய உம்மை மன்றாடுகின்றோம்.



Amen
பதிலளிநீக்கு