ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு - பாலர்சபை தினம் (12-02-2023)
வாசகங்கள்
முதல் வாசகம் : சீராக் 15:15-20
இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 2:6-10
நற்செய்தி வாசகம் : மத்தேயு 5:17-37
திருப்பலி முன்னுரை
ஆண்டின் பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு மற்றும் பாலர்சபை தினம் ஆகிய திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் இதயம் கனிந்த அன்பின் வாழ்த்துக்கள்.
கட்டளைகள் மனிதனை நேர்வழிப் படுத்தி உன்னத வாழ்வு வாழ இறைவனால் கொடுக்கப்பட்டவை. பழைய ஏற்பாட்டில் மோசே வழியாக கட்டளைகளை கொடுத்து மக்களோடு உறவாடினார் இறைவன். காலப்போக்கில் இக்கட்டளைகள் உருமாறி மக்களிடம் மதிப்பு குறைந்து, அதை மீறி மக்கள் வாழ்ந்தனர். பாவத்திற்கு உள்ளாகி வாழ்வை இழந்தனர்.
தம் மக்களை மீட்க இறைமகன் மனுவுருவானார். தற்போது புதிய கட்டளைகளை நற்செய்தி வழியாக வழங்குகிறார் இறைமகன். திருச்சட்டம் மண்ணுலகில் நிறைவேறவே இவற்றை மக்களிடையே வெளிப்படுத்துகிறார் கிறிஸ்து இயேசு. சினமே அனைத்து பாவங்களுக்கும் அடிப்படை ஆகவே சினத்தை ஒருவர் கைக்கொள்ளலாகாது என்கிறார் இயேசு.
சினம், மணவிலக்கு, பொய்யான ஆணைகள் ஆகியவை குறித்து பரக்க பேசுகிறார் இறைமகன். இவை இன்றைய நம் உலகிற்கும் அடிப்படையானவையே. இறைவனின் பாதையில் நம் வாழ்வை அமைக்கும் போது அது திருச்சட்டத்திற்கும் கடவுளுக்கும் உகந்த வாழ்வாகவே அமையும் என்பதில் ஐயமில்லை. ஆகவே திருச்சட்டத்திற்கு உகந்த வாழ்வு வாழ, பாவங்களை விலக்கி நல்வாழ்வு வாழ வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசகம் முன்னுரை
இன்றைய முதல் வாசகம் சீராக்கின் ஞான நூலில் இருந்து அமைந்துள்ளது. விருப்புரிமையை மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. மனிதனின் வாழ்வு ஒழுக்கமாகவும் பாவமின்றியும் அமைய இறைவன் கட்டளைகளைக் கொடுத்தார். ஆனால் இன்றோ மனிதனுக்கு புதுவித கட்டளைகள் தேவைப்படுகின்றன. ஆண்டவர் அனைத்தையும் காண்கிறவர். தனக்கு அஞ்சி வாழ்வோரை என்றும் கண்காணித்து வருகிறார். அவரது அரசில் பங்குபெற நாம் நமது விருப்புரிமையை கண்டுணர்வோம். இறைப்பற்றில் நிலைத்து வாழ வாசகத்திற்கு இதய கதவுகளை திறப்போம்.
இரண்டாம் வாசகம் முன்னுரை
இரண்டாம் வாசகம் திருத்தூதர் பவுல் கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது தூய ஆவியும் அதன் வெளிப்பாடும் என்பதை மையாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. இறைத்திட்டத்தோடு இணைந்த கடவுளின் ஞானம் ஆழமானது அதை உணர்ந்தோர் வாழ்வில் தவறிழைக்க மாட்டார் என்பதை விளக்குகிறார் திருத்தூதர். தூய ஆவியாரே இறை ஞானத்தை வெவெளிப்படுத்தும் கருவி, அவரே நம் உள்ளத்தை ஆராய்பவர். ஆகவே கடவுளோடு இணைந்து வாழ நாம் இறை ஞானத்தில் வளர வாசகத்திற்கு செவிமடுப்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- சிறந்த ஆசிகளை எமக்கு நல்கிய அன்பு இறைவா! நீர் வழங்கும் அன்பையும் அமைதியையும் நீடித்த அருளையும் பெற்றுக் கொள்ள எம்மை நாங்கள் தகுதிபடுத்தி தயாரிக்கவும்; நாங்கள் கூறும் வாழ்த்துக்களும் ஆசிகளும் எம்மிலும் பிறரிலும் நிலைத்து நாங்கள் மிகுந்த பலன் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- எம் துன்ப நேரங்களில் எம்மோடு உடனிருக்கும் இறைவா! வாழ்வின் கடினமான சூழ்நிலைகளில் உமது அன்பையும் உடனிருப்பையும் ஏற்க மறந்திருக்கிறோம், உமது அன்பின் அரவணைப்பு எமது கவலைகள், கண்ணீர், துன்பங்களை மாற்றி அதற்குபதிலாய் ஆறுதலை பெற்று தரும் என்பதை உணர்ந்து உமது உடனிருப்பை உணர்ந்து வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- சமூக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்ட இறைவா! சமூகத்தின் அனைத்து நிலையிலும் பல ஆயிரம் பணிகள் குவிந்திருக்கின்றன. இதை உணராமல் நான் என்ற குறுகிய வட்டத்தில் வாழ்வதை விடுத்து சமூகத்தின் அநீதிகளை எதிர்த்து போராடவும், சமூக நலனுக்காக உழைக்கும் நல்லுள்ளம் தந்து வழிநடத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- எம்மை மனித நேயத்துடன் வாழ பணித்த இறைவா! எமது முன்சார்பு எண்ணங்களால் பிறரை பழிக்காமல் தீர்ப்பிடாமல் வாழவும்; குடும்ப, சாதிய, சமய பின்னணிகளை வைத்து வாய்ப்புகளையும், உரிமைகளையும் மறுக்காமல் அனைவரையும் சமமாக பாவித்து மாந்தர் நலன் பேணி வாழும் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- நேர்மையிலும் தூய்மையிலும் வாழ பணித்த இறைவா! உலகின் அனைத்து செயல்களையும் விட இதய நேர்மையும், தூய்மையுமே உயர்வானது என்பதை நாங்கள் உணரவும்; இத்தகைய நேர்மையும் தூய்மையும் வலிமை மிக்கவை என்பதை நாங்கள் ஏற்கவும், எம்மை ஆற்றல்படுத்தும் நேர்மையில் நாங்கள் வளர துணை செய்ய உம்மை மன்றாடுகின்றோம்.



Amen
பதிலளிநீக்கு