ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு (05-02-2023)

 



வாசகங்கள்

முதல் வாசகம் : எசாயா 58:7-10

இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 2:1-5

நற்செய்தி வாசகம் : மத்தேயு 5:13-16


திருப்பலி முன்னுரை 

    ஆண்டின் பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் ஒளியாக உலகோருக்கு வாழ இறையில்லம் நாடி வந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 

   இவ்வுலகிற்கு ஒளியாய் வந்த இறைமகன் நம் வாழ்வின் அனைத்து அத்தியாயங்களிலும் நமக்கு உப்பாகவும், நம்மை வழிநடத்தும் கருவியாகவும் இருக்கிறார். நமது பாவங்களுக்கு கழுவாயாக தன்னை அர்ப்பணித்து நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிறார் நம் இறைமகன். 

         இன்றைய நாம் வாழும் உலகில் பிறரிடம் வஞ்சகம் கொண்டு பொய்யுரைத்து தம்மை காப்பாற்ற நினைக்கும் மனிதர்கள் பலர். ஆனால் இறைமகன் எந்நிலையிலும் கடவுளின் மீது கொண்ட அன்பினாலும் நம்மிடம் கொண்ட அக்கறையிலும் தன்னை கையளித்து நமக்கு நற்செய்தியாய் திகழ்கின்றார். 

      தன்னை ஒடுக்கி பிறரின் மகிழ்வுக்கு தன்னை அர்ப்பணிக்கும் போது நம் வாழ்வு நண்பகல் போல ஒளிவீசும். அத்தகைய ஒளி பலரை வாழ்விக்கும் தீபமாக மலைமீது ஏற்றப்பட்ட விளக்காக ஒளிர்ந்து பயன்தரும். உணவின் சுவை உப்பை மையப்படுத்தியே அமையும் அவ்வண்ணமே நம் வாழ்வின் சுவையும் இயேசுவை மையப்படுத்தி அமையவும்; வாழ்வை இழந்தோருக்கு புதுவாழ்வு தரவும் வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம். 



முதல் வாசகம் முன்னுரை 

    எசாயா இறைவாக்கினரின் உண்மையான உண்ணா நோன்பை பற்றி முதல் வாசகம் அழகுற எடுத்துரைக்கிறது. உணவு, உடை, இருப்பிடம் என்ற அத்தியாவசிய தேவைகளை பிறரோடு பகிர்வதில் ஆண்டவரின் உண்மையான நோன்பு அடங்கியுள்ளது என்கிறார் எசாயா இறைவாக்கினர். நமது நுகத்தையும் பிறரை பழித்து பொய்சாட்சி கூறுவதையும் அகற்றி பசித்தோருக்கு நம்மையே கையளிக்கும் போது இருள் நடுவே நம் வாழ்வு மிகுந்த ஒளி தரும் என்றுரைக்கும் வாசகத்தை கேட்கும் நாமும் நம்மை வறியோருக்கு கையளிக்க வாசகத்தை கவனமுடன் கேட்போம். 



இரண்டாம் வாசகம் முன்னுரை 

   திருத்தூதர் பவுல் கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை பற்றிய நற்செய்தியை கூறியதை மையமாக வைத்து இரண்டாம் வாசகம் அமைந்துள்ளது. தன் இயலாமையில் கடவுளின் வல்லமையால் எவ்வாறு திருத்தூதர் நற்செய்திக்கு சான்று பகர்ந்தார் என்பது குறித்து இவ்வாசகத்தில் குறிப்பிடுகிறார். நமது நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அன்று மாறாக கடவுளின் வல்லமையே என்பதை எடுத்துரைக்கிறார் திருத்தூதர். கடவுளின் வல்லமையால் உலகில் நல்லவற்றை செய்ய வாசகத்தை மனதில் ஏற்போம். 



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. ஆற்றல்மிகு செயல்களை அன்றாடம் செய்ய எமக்கு ஊக்கமளிக்கும் இறைவா! சொல்லும் செயலும் இடைவெளி இன்றி ஒத்துப்போவது முக்கியமானது. சொல்வதை விட செய்து முடிப்பதே சாலச்சிறந்தது. வெற்றுச் சொற்களை நாங்கள் விதைக்காமல், செயல் என்பதே சிறந்த சொல் என்பதை ஏற்று எமது வாழ்நாளில் ஆற்றல்மிகு செயல் பல புரிய உமதருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. எளியோருக்கு உமது வாழ்வில் இடமளித்த இறைவா! நமது விருப்பப்பட்டியல் என்ற உறவு வளையத்தில் பிரபலங்கள், பெரிய தொழில் அதிபதிகள், அதிகாரிகள் இருக்க விரும்புகிறோம். ஆனால் இறைவனின் உறவு வளையத்தில் எளிய மனிதர்கள் இடம் பெற்றிருந்தனர். நாங்களும் இறைவனின் வழியில் எம் உறவு வளையத்தை அமைத்து சமூகத்தின் அனைத்து நிலையினருடன் உறவு பாராட்ட வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அர்ப்பணத்துடன் மக்கள் பணி ஆற்றிய இறைவா! உமது பணியின் வழியாக, தேவையோடு வரும் மக்களின் உள்ள எண்ணங்களை புரிந்து கால நேரமின்றி மக்கள் பணி செய்யவும்; தேவை ஏற்படும் போதெல்லாம் மக்களின் உரிமைக்கு குரல் கொடுக்கவும்; விருப்ப ஆர்வத்துடனும் அர்பெபணத்துடனும் மக்கள் பணியாற்ற ஆசி தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. இறை விருப்பம் நிறைவேற்றும் மனிதர்களாக வாழ அழைக்கும் இறைவா! நாங்கள் எமது சுய விருப்பத்தையும் இறை விருப்பத்தையும் ஆராய்ந்து வாழ எமக்கு அருள்புரியும். சுய விருப்பம் எங்களை சுற்றி கோட்டைகளை எழுப்பி பிறரை சுரண்டி அழிக்கும் என்பதை நாங்கள் உணரவும்; இறை விருப்பம் அனைவரையும் வாழ வைக்கும் என்பதை ஏற்று நாங்கள் வாழ பொதுநலன் பேணும் நல்லுள்ளம் எம்மில் மலர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  5. அடிமை நுகம் தகர்த்த இறைவா! இன்றைய உலகில் பெரும்பாலான மனிதர்கள் யாருக்கோ அல்லது எந்த பழக்கத்திற்கோ  அடிமைப்பட்டு வாழ்கின்றனர். இதைக் களைந்து நல்லவற்றை மட்டுமே வாழ்வில் வெளிப்படுத்தும் மனிதர்களாக வாழவும்; எம்மிடையே காணப்படும் அடிமை நுகத்தை தகர்த்து உமது வழியில் எம் வாழ்வை அர்ப்பணித்து வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

பிரபலமான இடுகைகள்