தவக்காலம் இரண்டாம் ஞாயிறு (05-03-2023)



 வாசகங்கள்

முதல் வாசகம் : தொடக்க நூல் 12:1-4

இரண்டாம் வாசகம் : 2 திமொத்தேயு 1:8-10

நற்செய்தி வாசகம் : மத்தேயு 17:1-9


திருப்பலி முன்னுரை 

   தவக்காலம் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவன்பால் முழு நம்பிக்கை கொண்டு வாழ இறையாசீர் பெற வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

              நம்பிக்கை மனவுறுதியின் வெளிப்பாடு. இறைவன் மீது அசையா நம்பிக்கை வைக்கும் போது அவரது உதவியோடு நாம் அனைத்தையும் சாதிக்க இயலும். நம் எண்ணத்திலும் செயலிலும் நம்பிக்கை வெளிப்படும் போது எண்ணியவை கைகூடுவது திண்ணம். 

                இன்றைய நம் வாழ்வை சீர்தூக்கி நமது நம்பிக்கையை சற்று புடமிட்டு பார்ப்போம். நமது வாழ்வில் எத்தகைய சோகம் வந்தாலும், வீழ்ச்சிகள் வந்தாலும் இறைநம்பிக்கையில் விலகாமல் நமது விசுவாசத்தை காத்துக்கொள்கிறோமா? சிந்திப்போம். 

             வெளிவேடங்கள், முகமூடிகள், வீண் ஆடம்பரங்கள் என நம் வாழ்வு நம்பிக்கையினின்று விலகி உலக பாதையில் பயணிக்கிறது. இதை அகற்றி உள்ளத்திற்கு தெளிவைத் தரும் இறை நம்பிக்கையில் நிலைத்து நமது வாழ்வை தூய்மையாக்குவோம். 

          நம் வாழ்வை சீர்படுத்த நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த தவக்காலத்தை முன்மதியோடு உபயோகித்து இறைவனோடு இணைந்து வாழவும், பிறரை மதித்து சமூகத்துடன் இணைந்து வாழும் வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம். 



முதல் வாசகம் முன்னுரை 

        ஆபிரகாமின் அழைப்பை மையமாக வைத்து தொடக்க நூலில் இருந்து முதல் வாசகம் அமைந்துள்ளது. ஆண்டவரின் வாக்கிற்கேற்ப தனது நாட்டை விட்டு ஆபிரகாம் கடவுள் வாக்களித்த நாட்டில் குடியேற செல்கிறார். ஆண்டவரின் வாக்கின் மீது முழு நம்பிக்கை வைப்போரை அவர் என்றென்றும் கைவிடுவதில்லை. ஆண்டவர் குறித்தது நிறைவேறுமட்டும் அவர் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவார் என்ற உண்மையை உணர்ந்து வாழ வாசகத்தை கவனமுடன் வாசிக்க கேட்போம். 



இரண்டாம் வாசகம் முன்னுரை 

   திமொத்தேயுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் இருந்து இவ்வாசகம் அமைகிறது. நாம் நமது நம்பிக்கையில் நிலைத்திருப்பதன் மேன்மையை இவ்வாசகம் தெளிவுற எடுத்துக் கூறுகிறது. நற்செய்தியின் பொருட்டு துன்பத்திற்கு உள்ளானாலும் ஆண்டவர் மீதுள்ள நம்பிக்கை என்றும் மாறாது. ஏனெனில் அவர் கிறிஸ்து இயேசு வழியாக நம்மை மீட்டார் என்ற உயரிய உண்மை இவ்வாசகம் வழியாக வெளிப்படுகிறது. நாமும் நம்பிக்கையில் நிலைத்திருக்க வாசகத்திற்கு மனதை திறப்போம். 



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. பிறரின் மனதை புரிந்து வாழ எம்மை அழைத்த இறைவா! மனங்கள் மழுங்கடிக்கப்பட்டால் எதையும் உணர்ந்து கொள்ள முடியாது. இறுக்கமான புதியன ஏற்கும் பக்குவமற்ற மனம் எதையும் புரிந்து கொள்ள முயற்சிக்காது என்பதை நாங்கள் உணர்ந்து புதியன ஏற்கும் திறந்த மனம் கொண்டு வாழவும், எல்லாவற்றையும் உணர்ந்து வாழும் திறனை எமக்கு அளிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. இறைவனுக்கு ஏற்ற வாழ்வு வாழ எம்மை அழைத்த இறைவா! நாங்கள் இறைவார்த்தையை புறக்கணித்து, பல முகமூடிகள் அணிந்து மனிதருக்கு ஏற்றவராகவே வாழ ஆசைப்படுகிறோம். இது தவறான செயல் என்பதை நாங்கள் உணர்ந்து உமக்கேற்ற வாழ்வை நாங்கள் தேர்ந்தெடுத்து வாழவும், என்றும் உமது பாதச்சுவடுகளை பின்பற்றி வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. சமூகம் வாழ தன்னை இழக்க துணிந்த இறைவா! தன் வாழ்நாளை பெரிதாக நினைக்கும் மனிதர்கள் பிறர் வாழ தன்னை இழக்க மறுக்கின்றனர். தன்னை இழக்க துணிந்தால் மட்டுமே உரிமை வாழ்வும், வரலாறும் படைக்க முடியும் என்பதை உணர்ந்தோராய் பிறர் வாழ்வும் உரிமை சமூகம் படைக்கவும் எம்மை இழக்கும் துணிவு எம்மில் பிறக்க வரமருள  உம்மை மன்றாடுகின்றோம்.
  4. நம்பிக்கையால் எம்மை வாழ்வித்த இறைவா! நம்பிக்கை ஒன்றே வாழ்வை செதுக்கி, செம்மையாக்கி எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் தரவல்லது. நேர்மறையான எண்ணங்கள் நம்மிடம் துளிர்விடும் போது புதியன படைக்கும் ஆற்றலும் நம்பிக்கையும் சேர்ந்து வளர துவங்கும். இறைவா உமது வழியினின்று விலகாமல் உம்மை துணையாகக் கொண்டு வாழ்வில் முன்னேற வரம் தர உம்மை மன்றாடுகின்றோம்.
  5. பிறரை புரிந்து வாழ பணித்த இறைவா! பேச வேண்டிய இடங்களில் மௌனம் காப்பது அநீதிக்கு துணைபோவதே; புரியாதவற்றை புரிந்து கொள்ள முயற்சிப்பது நம்மை உண்மையின் பாதையில் வழிநடத்தும். பிறரை புரிந்து கொண்டு உண்மையினின்று விலகாமல் என்றும் இறையன்பில் இணைந்து வாழும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

பிரபலமான இடுகைகள்