தவக்காலம் முதல் ஞாயிறு (26-02-2023)


 வாசகங்கள்

முதல் வாசகம் : தொடக்க நூல் 2:7-9

இரண்டாம் வாசகம் : உரோமையர் 5:12-19

நற்செய்தி வாசகம் : மத்தேயு 4:1-11


திருப்பலி முன்னுரை

    தவக்காலம் முதல் வாரம் திருப்பலியில் பங்கேற்று ஆண்டவராகிய இறைவனின் அருட்கொடைகளை பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 

          சோதிக்கப்படுதல் என்பது ஒருவரை புடமிட்டு அவரின் நற்குணங்களை உலகிற்கு வெளிப்படுத்த உதவும். மரத்தின் நுனியைக் சோதித்து மரத்தின் தன்மையை நிரூபிப்பது கடினம் மாறாக அதன் கனியைக் கொண்டு மரத்தின் தன்மையை சிறப்பாக விளக்க முடியும். 

       அவ்வண்ணமே இயேசு கிறிஸ்துவும் தான் சோதனைக்கு உள்ளான போது தன் தவ வாழ்வினாலும், இறைவார்த்தை மீது கொண்ட நம்பிக்கையாலும் அலகையை வென்றார். இன்றைய உலகில் நாமும் தினம் தினம் சோதிக்கப்படுகிறோம். நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சோதனைகளை எங்ஙனம் கையாள்கிறோம் என்பதை சிந்திப்போம். 

     இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு, செபத்திலும் தவத்திலும் நிலைத்திருக்கும் போது எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதை எதிர்த்து போராடும் துணிவு நம்மில் பிறக்கும். அந்த துணிவு நமது வாழ்வை இறைவனின் பாதையில் அமைக்க உதவி செய்யும். 

            நாம் கனவுகளுக்கு ஏற்புடைய வாழ்வு வாழ கிறிஸ்து தம்மையே தியாகப் பலியாக்கினார். அவரது தியாகத்தை நினைவுகூறும் இத்தவக்காலத்தில் நாமும் இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வை வாழ செபம், தவம் மற்றும் தானம் என்னும் பண்புகளை கொண்டு வாழ்வோம். இறைவனில் ஒன்றிணைந்து மீட்படைய வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம். 


முதல் வாசகம் முன்னுரை 

        ஆண்டவரின் ஆண், பெண் படைப்பை மையமாக வைத்து, தொடக்கநூலில் இருந்து முதல் வாசகம் அமைந்துள்ளது. தனது சாயலாக உருவாக்கிய மனிதனை சோதிக்கும் பொருட்டு ஆண்டவர் ஏதேன் தோட்டத்தின் நடுவில் நன்மை தீமை அறியும் வாழ்வின் மரத்தை உருவாக்கி சோதித்தார். ஆண்டவர் மேல் நம்பிக்கை அற்ற மனிதனின் விளைவால் உலகில் பாவம் நுழைந்தது. நாமும் சோதனைக்கு உட்படாமல் இருக்க இத்தவக்காலத்தில் நம்பிக்கையோடு இறைவனின் அருள் பெற்று வாழ வாசகத்திற்கு உள்ளத்தை திறப்போம். 


இரண்டாம் வாசகம் முன்னுரை 

       திருத்தூதர் பவுல் உரோமை நகர மக்களுக்கு எழுதிய திருமுகத்தில் இருந்து இரண்டாம் வாசகம் அமைந்துள்ளது. இவ்வாசகம் ஆதாமையும் கிறிஸ்துவையும் ஒப்புமை காட்டும் வண்ணம் அமைந்துள்ளது. ஒருவர் செய்த தவறினால் உலகில் பாவம் நுழைந்து அனைவரையும் பாதித்தது. மக்களை மீட்க வந்த இயேசுவின் வழியாக அருள் கொடைகள் உலகை நிரப்பியது. ஒருவரின் ஏற்புடைய செயல் பலருக்கு மீட்பாக அமைந்ததை வாசகம் வழியாக உணர்வோம். நாமும் கடவுளுக்கு ஏற்புடையவராக வாழ வாசகத்திற்கு இதய கதவுகளை திறப்போம். 


 நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  • பிறரின் அழுகையை மகிழ்ச்சியாக மாற்றிய இறைவா! விரும்புவதை மட்டும் கேட்டு விரும்பாததை புறக்கணிக்கும் உலகில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிறரின் அழுகுரல் கேட்டு அவர்களை தேற்றும் மனிதர்களாக நாங்கள் வாழவும்; திறக்கப்பட வேண்டியவை எமது செவிகள் மட்டுமல்ல இதயமும் தான் என்பதை உணர்ந்து பிறர் வாழ்வு வளம்பெற உழைக்கும் மனம் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  • பிறருக்கு சான்று வாழ்க்கை வாழ எம்மை அழைத்த இறைவா! சொல்வதை செய்வதும், செய்வதை சொல்வதும் சான்றோர் பண்பு. வாழ்வும் போதனையும் ஒன்றாக இருக்கும் போது போதிப்பவருக்கும், போதனைக்கும் மரியாதை கிடைக்கிறது. இறைவா நாங்களும் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இன்றி வாழ்ந்து, உமது வழியில் பிறருக்கு முன்மாதிரியான வாழ்வு வாழ வரம் தர உம்மை மன்றாடுகின்றோம். 
  • செபத்தின் மேன்மையை எமக்கு உணர்த்திய இறைவா! தவக்காலம் முதல் ஞாயிறு வழிபாட்டில் இணைந்திருக்கும் நாங்கள் செபத்தின் மேன்மையை உணர்ந்து இந்த தவக்காலம் முழுவதும் செபம், தவம், தானம் ஆகிய பண்புகளை கடைபிடித்து ஒழுகவும்; உம்முடன் உறவாடி இறை மனித உறவு பாலத்தை இன்னும் பலப்படுத்தும் கருவிகளாய் நாங்கள் உருமாற இத்தவக்காலத்தை பயன்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  • விவாதத்தின் அவசியத்தை எமக்கு எடுத்துக்காட்டிய எம் இறைவா! சடங்குகளையும் சட்டங்களையும் பற்றி அவசியமற்ற விவாதங்கள் பல செய்கின்றோம். எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான விவாதங்களை முன்னெடுக்கவும், அவசியமற்ற விவாதங்களை களைந்து தேவையான விவாதங்களை முன்னெடுத்து எமது வாழ்வையும், பிறரின் வாழ்வையும் உயர்த்த தேவையான வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  • மனங்களை புரிந்து வாழ எமக்கு வாய்ப்பளித்த இறைவா! புதியன ஏற்கும் மனமும், கபடற்ற மனமும் அனைவரையும் புரிந்து வாழும் வாழ்வை நமக்கு எடுத்துரைக்கிறது. பிறரை புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் திறந்த மனம் எங்களுக்கு தேவை என்பதை உணர்ந்து, எல்லாவற்றையும் உணர்ந்து பிறரை புரிந்து வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

பிரபலமான இடுகைகள்