ஆண்டின் பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு(29-01-2023)



 வாசகங்கள்

முதல் வாசகம் : செப்பனியா 2:3, 3:12-13

இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 1:26-31

நற்செய்தி வாசகம் : மாற்கு 5:1-12


திருப்பலி முன்னுரை 

    ஆண்டின் பொதுக்காலம் நான்காம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் அருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். 

      கடவுள் தான் உருவாக்கிய மனிதர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அதற்காகவே தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்பி, நம் பாவங்களுக்கு கழுவாயாக, மரணத்தை ஏற்றுக்கொள்ள செய்தார். ஆண்டவரின் அன்பை பெற நாம் செய்வது என்ன சிந்திப்போம். 

       ஆண்டவரின் கட்டளைகளை கடைபிடித்து, நேர்மையையும் நீதியையும் உண்மையையும் பின்பற்றி நம் வாழ்வை வாழ்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்ப்போம். உலகமுடிவில் கடவுளின் சினத்திற்கு உட்படாமல் இருக்க இவற்றை கடைபிடிப்பது அவசியம். 

           ஆகவே நாம் வாழும் உலகில் நமக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்து, இறையாட்சியின் மதிப்பீடுகளை நம்மில் விதைத்து இறைவனுக்கு உகந்த வாழ்வு வாழ நம்மை தயாரிப்போம். நமக்கு மீட்பைப் பெற்று தரும் இறைவன் நம் உள்ளத்தின் தேவைகளை ஆராய்ந்து நிறைவேற்ற வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம். 



முதல் வாசகம் முன்னுரை 

    இறைவாக்கினர் செப்பனியா நூலில் இருந்து முதல் வாசகம் அமைந்துள்ளது. மனந்திரும்பவும், எருசலேமின் மீட்பை அறிவிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது இவ்வாசகம். ஆண்டவரின் கட்டளைகளை கடைபிடித்து, நிறைவான நேர்மையையும் மனத்தாழ்வையும் கொண்டிருப்போர் ஆண்டவரின் சினத்திற்கு உட்படமாட்டார் என்றும்; இஸ்ரயேலின் எஞ்சிய மக்கள் ஆண்டவரில் இளைப்பாறுவர் என்றும் குறிப்பிடுகிறார் இறைவாக்கினர். இவ்வாசகத்தை கேட்கும் நம்மிலும் நேர்மையும் தாழ்ச்சியும் குடிகொள்ள வாசகத்தை மனதில் ஏற்போம். 



இரண்டாம் வாசகம் முன்னுரை 

     திருத்தூதர் பவுல் கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இருந்து இரண்டாம் வாசகம் அமைகிறது. கிறிஸ்துவே கடவுளின் ஞானமும் வல்லமையும் என்பதை பின்னணியாகக் கொண்டு இவ்வாசகம் அமைகிறது. கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம் என்பதை உறுதிப்படுத்தவும் கடவுளின் முன் எவரும் பெருமைபாராட்டாமல் வாழவும் எதிர்மறையானவற்றை கடவுள் தேர்ந்து நம்மை அவருடன் இணைத்துக் கொண்டார் என்கிறார் திருத்தூதர். நம்மை மீட்டெடுக்கவே உலகம் இகழ்ந்தவற்றை தேர்ந்தெடுத்தார் நம் இறைவன். நாமும் இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வு வாழ வாசகத்தை வாழ்வாக்குவோம். 



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. எம்மை நன்மைகள் பல செய்ய அழைத்த இறைவா! விரும்பி பிறருக்கு நன்மைதனங்களை செய்யும் மனிதன் நீடூழி வாழ்வான் என்பதை நாங்கள் ஏற்கவும்; இறைமகன் மனித உரு கொண்டதும் பிறருக்கு நன்மைகள் பல செய்யவே என்பதை நாங்கள் உணர்ந்து எம் வாழ்வை சீர்படுத்தி என்றும் பிறருக்கு விரும்பி நன்மைகள் செய்யும் நல்மனதை தந்தருள உம்மை மன்றாடுகின்றோம்.
  2. நமது வாழ்வையும் பணியையும் இறைவனுக்கு சான்றாக வாழ எம்மை பணித்த இறைவா! நாங்கள் செய்யும் ஒவ்வொரு பணியையும் ஆர்வமாகவும் முழு அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் செய்யவும்; எமது வாழ்வும் எமது பணியும் உமக்கு சான்றுபகரம் வகையில் அமைந்து பிறருக்கு பயனுள்ள வகையில் நாங்கள் வாழ எங்களுக்கு உமதருள் தந்து வழிநடத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  3. புதுமை பிறக்க புதிய இதயம் தரும் இறைவா! எல்லாவற்றிலும் பழமை பேணி, சிந்தனையில் புதுமை காணுவது இயலாதது. எண்ணங்கள் புதியவற்றால் நிரம்ப, புவியில் புதுமை பிறக்க புதிய இதயங்கள் தேவை. பழமைக்கு விடைகொடுத்து புதிய இதயம் பெறும் துணிவைத் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  4. வாழ்விக்கும் சட்டங்களை காக்க எம்மை அறிவுறுத்திய இறைவா! மனிதர்களை விட சட்டங்கள் முக்கியத்துவம் பெறும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயேசுவின் வழியை பின்பற்றி வாழ்விக்கும் சட்டங்களுக்கு நாங்கள் வலுசேர்க்கவும்; வாழ்வை அழிக்கும் சட்டங்களையும், மானுடத்தை சிறுமைப்படுத்தும் சட்டங்களையும் மறுத்து வாழும் துணிவு தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  5. நன்மைகள் செய்யும் நல்லுள்ளத்தை எம்மில் உருவாக்கிய இறைவா! பிறரை குறித்து அஞ்சாமல் எம் மனச்சான்றின்படியும் இறைவனின் திருவுளத்திற்கு ஏற்பவும் நன்மைகள் பல செய்து வாழவும்; நன்மைகளை உடனே செய்து வாழவும், குறைசொல்லுக்கு பயந்து நன்மை விலக்காமல் வாழும் நல்லுள்ளத்தை எமக்கு தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

பிரபலமான இடுகைகள்