ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு (22-01-2023)



 வாசகங்கள்

முதல் வாசகம் : எசாயா 9:1-3

இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 1:10-13,17

நற்செய்தி வாசகம் : மாற்கு 4:12-23


திருப்பலி முன்னுரை 

    ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவார்த்தையை கேட்டு பலமடங்கு பலன்தர, இறையில்லம் நாடி வந்திருக்கும் இறைமக்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள். 

             நற்செய்தியை கேட்டு அதன்படி வாழ்ந்து சிறந்த பலன் கொடுப்பதே நம் வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகும். இதையே திருத்தூதர்களும், நமது நற்செய்தியாளர்களும் எடுத்துரைத்து வாழ்கின்றனர். இறைவனின் நற்செய்தி நம் வாழ்வை மாற்றியமைக்கும். 

           விளக்கு தண்டின் மீது வைத்த விளக்கு அனைவருக்கும் ஒளி தருவது போல, இறைவார்த்தையை வாசித்து தியானித்து அதன்படி வாழும் போது நாம் நமக்கும் பிறருக்கும் கடவுளுக்கும் ஏற்புடைய வாழ்வை வாழ்கிறோம் என்பதே நிதர்சனம். நம் வாழ்வின் நிறைபலனும் அப்போது வெளிப்படும். 

               மேலும் கடவுள் தான் தேர்ந்து கொண்ட மக்களினத்தை என்றும் கைவிடுவதில்லை. தன் மக்களுக்கு தான் குறித்தது நிறைவேறுமட்டும் அவர் நம்மை வழிநடத்துகிறார் என்பதை நாம் உணர்வோம்.நம் வாழ்வில் இறைவனின் வார்த்தையை மனதிற்கொண்டு வாழ்ந்து நிறைபலன் தரவும் முன்மாதிரியான வாழ்வு வாழவும் வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம். 



முதல் வாசக முன்னுரை 

    இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எசாயா நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் அரசரைக் குறித்து இறைவாக்கினர் முன்மொழிந்ததை மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. ஆண்டவர் தான் தேர்ந்து கொண்ட மக்களினத்தை என்றும் கைவிடுவதில்லை. அவர் தான் குறித்தது நிறைவேறுமட்டும் நம்மோடுகூட இருந்து நம்மை வழிநடத்தி நிறைபலன் தருமளவு நம்மை வழிநடத்துகிறார். அவரோடு இணைந்து அவர் பாதையில் பயணித்து பேரொளியைக் காண வாசகத்திற்கு மனதை திறப்போம். 



இரண்டாம் வாசக முன்னுரை 

     திருத்தூதர் பவுல் கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இருந்து இரண்டாம் வாசகம் அமைந்துள்ளது. திருச்சபை பிளவுகள் குறித்து எடுத்துரைக்கும் திருத்தூதர் நம்மிடையே பிளவுகள் இருத்தல் கூடாது என்று குறிப்பிடுகிறார். நாம் அவரின் அழைப்பை ஏற்று அவருக்கு பணி செய்ய வேண்டும் என்றும், நற்செய்தி அறிவிக்கவே தான் வந்ததாகவும் குறிப்பிடுகிறார். இறை நற்செய்தியின் பொருளை உணர்ந்து நிறைபலன் தர இரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம். 



நம்பிக்கையாளரின் மன்றாட்டு

  1. ஞானத்தின் முக்கியத்துவத்தை எமக்கு உணர்த்திய இறைவா! நாங்கள் ஞானத்தை தேடிச்சென்று அதை கண்டடையவும்; பிறரிடம் இருக்கும் குறைகளையும் இயலாமையையும் மட்டும் காணாது அவர்களிடம் இருக்கும் உண்மையை, நன்மைதனங்களை பார்த்து செயல்படுவது சிறந்தது என்பதை உணர்ந்து உமது வழியில் வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  2. மக்கள் பணி செய்ய எம்மை வழிநடத்தும் இறைவா! நாங்கள் மக்களுக்காக பணி செய்யும் நல்லுள்ளம் எம்மில் வளரவும்; சர்வாதிகார ஆட்சி மாற்றம் பெற்று மக்கள் நலன் காக்கும் ஆட்சி உலகில் மலரவும், ஆட்சியாளர்கள் என்றும் உமது மதிப்பீடுகளின்படி வாழ்ந்து உமது இறையரசை கட்டியெழுப்ப வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  3. பிறருக்கு நன்மை செய்ய எம்மை அழைத்த இறைவா! தமக்கு கிடைக்கும் நேரத்தையும், தாம் உருவாக்கும் செல்வத்தையும் உலகோடு பகிர்ந்து வாழ்வோர் காலம், இடம் கடந்து என்றும் மக்கள் மனதில் வாழ்கின்றனர் என்பதை நாங்கள் உணர்ந்து எம்மோடு இருப்பதை பிறரோடு பகிர்ந்து வாழவம்; எம்மால் இயன்றவரை பிறருக்கு நன்மை செய்து வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  4. உடன்வாழ்வோர் நலனுக்கு உறுதுணையாக இருக்க பணித்த இறைவா! அடுத்திருப்பவருக்காக சிறப்பு முயற்சிகள் எடுத்து நன்மைகள் பெற்று கொடுப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அடையாளம். உடன்வாழ்வோர் நலனுக்கு  உறுதுணையாக இருக்கும் மக்கள் வாழும் சமூகம் பேறுபெற்றது என்பதை நாங்கள் உணர்ந்து பிறர் நலன்கள் காண எம் நலன் இழக்க அருள்புரிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
  5. அன்பால் மக்கள் அனைவரையும் அரவணைத்த இறைவா! கடவுளின் கருணை மனம் திரும்பாதவர்களை சார்ந்தே அமைந்தது. இயேசுவின் அன்பான அணுகுமுறை பாவத்தில் இருந்து மக்களை விடுவித்து அவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது. நாங்களும் அன்பால் பிறரை அறவழிப்படுத்த அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த பதிவை படித்து பயன்பெற்றமைக்கு நன்றி 🙏

பிரபலமான இடுகைகள்