ஆண்டின் பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு (15-01-2023)
வாசகங்கள்
முதல் வாசகம் : எசாயா 49:3,5-6
இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 1:1-3
நற்செய்தி வாசகம் : யோவான் 1:29-34
திருப்பலி முன்னுரை
ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனோடு இரண்டற கலந்து இறை அருளைப் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.
பிறருக்கு சான்றுபகரும் வாழ்க்கை சற்று கடினமான ஒன்று என்றாலும் கிறிஸ்துவுக்கு முன் தோன்றிய திருமுழுக்கு யோவான் மெசியாவுக்காக சான்றுபகர்கிறார். இதன்மூலம் இனி வரவிருக்கும் மெசியா கிறிஸ்துதாம் என்று மக்கள் அறியும்வண்ணம் முன்னறிவிக்கிறார் யோவான்.
பிறரைப் பற்றி அவதூறாக பேசும் உலகில் வரவிருப்பவரைக் குறித்து போற்றுவது வணக்கத்திற்குரியது. இவ்வாறாக அனைத்து மக்களுக்கும் மீட்பை வழங்க தோன்றிய மாபரனை உலகிற்கு அறிமுகம் செய்கிறார் யோவான். தூய ஆவியால் திருமுழுக்கு கொடுப்பவரும் மக்கள் அனைவருக்கும் பொதுவானவருமான மீட்பரை மக்கள் அறிந்து கொள்கின்றனர்.
அனைவருக்கும் ஒளியான இறைவன் நம் உள்ளங்களில் வந்து நமக்கு மீட்பை பெற்றுத்தர வேண்டுவோம். பிறரை குறித்து தவறான வமந்திகளை பேசாமல் அருகாமை மக்களுக்கு உண்மையாகவும் நியாயமாகவும் வாழ்வோம். பிறருக்கு முன்மாதிரியான வாழ்வு வாழ வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
முதல் வாசகம் இறைவாக்கினர் எசாயா நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மக்களினங்களுக்கு ஒளியாக திகழும் இஸ்ரேலை பற்றி முன்னறிவிக்கும் விதமாக இவ்வாசகம் அமைந்துள்ளது. இஸ்ரயேலின் வழியாக கடவுள் மாட்சியும் மேன்மையும் அடைவதாக கூறுகிறார் இறைவாக்கினர். உலக மக்கள் அனைவருக்கும் கடவுளின் மீட்பு பொதுவானது. அதை அடைய அனைவருக்கும் ஒளியாக திகழும் இஸ்ரயேலை போல நாமும் நம் வாழ்வின் வழியாக பிறருக்கு ஒளியாக வாசகத்திற்கு மனதை திறப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
திருத்தூதர் பவுல் கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இருந்து இரண்டாம் வாசகம் அமைந்துள்ளது. அந்நகர மக்களுக்கு வாழ்த்தும் நன்றியும் கூறும் திருத்தூதர் கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்றும் அவரது மீட்பு அனைத்து இனத்தாருக்கும் பொதுவான ஒன்று என்றும் கூறுகிறார். கடவுள் ஒருவரே அவர் உருவாக்க நினைக்கும் உலகில் ஏற்றத்தாழ்வற்ற, பிறரன்பு நிறைந்த பாகுபாடற்ற மக்கள் நிறைந்திருப்பர் என்பது இதன்வழியாக வெளிப்படுகிறது. ஆகவே வாசகத்தை கேட்கும் நாமும் ஒருவர் மற்றவரிடம் அன்பில் நிலைத்திருக்க வாசகத்தை கவனமுடன் வாசிக்க கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது. தந்தையின் குரலொளி கேட்டது. "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவருக்குச் செவிசாயுங்கள்" அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- பிறரை முன்னிலைப்படுத்தும் சாந்த குணம் தரும் இறைவா! மனிதர்கள் என்றும் தம்மை முன்னிலைப்படுத்தி பிறரை தாழ்த்தும் எண்ணம் கொள்கின்றனர். இத்தகைய எண்ணத்தை நாங்கள் களைந்து திருமுழுக்கு யோவானிடம் காணப்பட்ட மனநிலையை நாங்கள் கொண்டிருக்கவும், பிறரை உயர்வாக எண்ணும் ஞானம் எம்மிடம் பிறக்கவும் அருள்புரிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- எல்லோரையும் சமமாக மதித்து வாழ அழைக்கும் இறைவா! நான், நாங்கள், எங்களுக்கே முதல் உரிமை என்ற சுயநல போர்வையில் நாங்கள் வாழாமல் அனைவரும் முக்கியம் அனைவருக்கும் சமவாய்ப்பு உண்டு என்ற மனநிலை எம்மிடம் மலரவும்; எல்லோரையும் சமமாக மதித்து வாழ உமதருள் பொழிந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- உண்மை முகத்தில் வாழ பணித்த இறைவா! இரகசிய தன்மையை களைந்து எமது உண்மை முகம் வெளிப்படவும்; மறைக்கப்பட்ட பக்கங்கள் அதிகரிக்க அதிகரிக்க எமது வாழ்வு இரகசிய உலகமாக மாறிப்போய்விடும் என்பதை நாங்கள் உணர்ந்து வெளிப்படைத் தன்மையுடனும் உண்மையான மனதுடனும் வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- நல்லவற்றை ஏற்றுக்கொள்ளும் மனதை படைத்த இறைவா! நாங்கள் நினையாத இடங்களிலிருந்து வெளிப்படும் நன்மைத்தனங்களை ஏற்க மறுக்கும் உலகில் வாழும் நாங்கள், எம்மை சுற்றிலும் உள்ள எல்லாரிடமும் நன்மைத்தனமும் நல்லவைகளும் உண்டு என்பதை உணர்ந்தோராய் நல்லவற்றை ஏற்கும் துணிவு தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- பிறரை மனம்நிறைந்து பாராட்ட வாய்ப்பளித்த இறைவா! பாராட்டுவதும் பாராட்டப்படுவதும் இனிமையான அனுபவம். பாராட்டு வார்த்தைகள் பணிகளுக்கு புதுவேகம் தரும் என்பதை நாங்கள் உணர்ந்து மனம் நிறைந்து பிறரைப் பாராட்டவும், போலிப் பாராட்டுகளை களையும் தெளிவு தரவும் வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



Amen
பதிலளிநீக்கு